மகாராஷ்டிர மாநிலம் தானேயில் 15 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போதுள்ள காலத்தில் சிறுவர்கள் மொபைல் போனை பயன்படுத்தி வருவது போல், இந்த சிறுமியும் மொபைல் போனை அதிகம் பயன்படுத்துபவராக இருந்திருக்கிறார். அதிலும் இன்ஸ்டா பக்கத்தை அதிகம் பயன்படுத்தி வரும் இந்த சிறுமி, அதில் ஆண் நண்பர் ஒருவரிடம் விடாமல் பேசி வந்துள்ளார்.
அந்த இளைஞர் உல்லாஸ்நகர் என்ற பகுதியை சேர்ந்தவர். இருவரும் அருகருகே உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த சூழலில் தனது பெண் நண்பருக்கு ஒரு சிறு பிரச்னை என்றும், அதனால் நேரில் வந்து தீர்த்துவைக்குமாறும் அந்த இளைஞர் சிறுமியிடம் கேட்டுள்ளார்.
முதலில் தயங்கிய இந்த சிறுமி, பின்னர் அவரை காண வீட்டுக்கு தெரியாமல் சென்றுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி இரவாகியும் வரவில்லை. எனவே, அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்தியபோதும் சிறுமி குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவரவில்லை.
ஆனால் சிறுமி 2 நாட்களுக்கு பிறகு பல்வேறு காயங்களோடு வீடு திரும்பினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டனர். அப்போது தான் தனது இன்ஸ்டா நண்பனின் பெண் தோழிக்கு பிரச்னை என்று அவர் அழைத்ததால் நேரில் சந்திக்க சென்றதாகவும், ஆனால் அங்கே அவருடன் 3 பேர் சேர்ந்து தன்னை கடத்தி 2 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி கதறி கூறினார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து தானே கோல்சேவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பெரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (டி) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளான சாஹில் ராஜ்பர் (18), சுஜல் கவதி (20), விஜய் பெரா (21) மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 போரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்டா நண்பனை தேடி சென்ற சிறுமியை கடத்தி, சிறுவன் உட்பட 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் பல சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இதுபோல் முன் பின் தெரியாதவர்களை யாரும் நம்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.