கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் புத்தூர் பகுதியை அடுத்துள்ளது கெய்யூரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ராய் - மம்தா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி தற்போது ஷ்ரம்யா என்ற மகள் உள்ளார். ஷ்ரம்யா கல்லூரியில் பிசிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் அங்கு ஸ்கவுட்டில் வழிகாட்டி ரேஞ்சராகவும் இருந்து வருகிறார்.
சதீஷ் ராய் - மம்தாவுக்கு தோட்டம் ஒன்று உள்ளது. தினமும் அதற்கு மம்தாதான் தண்ணீர் பாய்ச்சுவார். அந்த வகையில் சம்பவத்தன்றும் மம்தா சுமார் மாலை 5 மணியளவில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அங்கே மறைந்திருந்த பாம்பு ஒன்று மம்தாவின் காலில் கொத்தியது. இதனை கண்டு அலறிக்கொண்டே வீட்டுக்குள் வந்துள்ளார் மம்தா.
அந்த சமயத்தில் அவரது மகள் மட்டும் இருக்கவே, அவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து சற்றும் தாமதிக்காமல், விஷம் தனது தாயின் தலைக்கு ஏறிவிடாமல் இருக்க, சினிமா பாணியில் கடித்த இடத்தில் கத்தியை கொண்டு அறுத்து, தனது வாயை வைத்து விஷம் கலந்த ரத்தத்தை உறிந்து வெளியே எடுத்துள்ளார் ஷரம்யா.
பின்னர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியோடு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் அவரை அங்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மம்தா பூரண குணமடைந்து நலமுடன் இருக்கிறார்.
பல நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், பாம்புக்கடி ஒரு தீவிர பொது சுகாதார பிரச்சினை. நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகளவில் 78,600 பாம்புக்கடி இறப்புகளில் 64,100 பேர் இந்தியாவில் நிகழ்கின்றன.