கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.
இதில் உலகின் பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதிலும் இறக்குமதி மற்றும் சுற்றுலாவை அதிகம் நம்பியுள்ள நாடுகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தன. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் பாதிப்பில் சிக்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான எகிப்து கடுமையாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் கோதுமை இறக்குமதி முழுக்க முழுக்க உக்ரைன், ரஷ்யாவை சார்ந்தே இருக்கும் நிலையில், அங்கு நடைபெற்றுவரும் போர் காரணமாக பெருமளவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா பயணிகள் வருவது குறைந்தது காரணமாக அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொண்ட எகிப்து பெரும் பணவீக்கத்தில் சிக்கித்தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. கோதுமை, முட்டை, சிக்கன் போன்ற உணவுகளின் விலை பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த உணவு பற்றாக்குறையை சமாளிக்க எகிப்து அரசு "நாய், பூனைகளுக்கு உணவாகத் தூக்கி எறியப்படும் கோழிக்கால்களில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் அவற்றை சமைத்து பொதுமக்கள் உண்ண வேண்டும்" எனக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு பதவிவிலக வேண்டும் என அங்கு போராட்டமும் தொடங்கியுள்ளது.