மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் 23 வயது திருமணமான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் கொண்ட அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். ஒரு சில நாட்களில் அந்த நபர் அந்த பெண்ணின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணுக்கு காவல்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த பெண்ணும் அந்த நபரோடு தொடர்ந்து பேசிவந்துள்ளார். ஒரு கட்டத்தில் வேலை தொடர்பாக நேரில் பார்க்கவேண்டும் அந்த அந்த பெண்ணை அழைத்துள்ளார்.
அதனை நம்பிய அந்த பெண்ணும் அந்த நபர் கூறிய இடத்துக்கு வந்துள்ளார். அப்போது அங்கு தனது நண்பர்கள் 4 பேரோடு தயாராக இருந்த அந்த நபர் அந்த பெண்ணை காரில் கடத்தி ராஜஸ்தானுக்கு கூட்டி சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் அங்குள்ள ஒரு நபர் ஒருவருக்கு ரூ.2 லட்சத்துக்கு அந்த பெண்ணை விற்பனை செய்துள்ளார். அந்த நபர் அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என அறிந்தும் கட்டாய திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனிடையே வெளியே சென்றவர் வீட்டுக்கு வராததால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலிஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் கடத்தப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவரின் இருப்பிடத்தை அறிந்த போலிஸார் அந்த பெண்ணை மீட்டுள்ளனர். பின்னர் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியை கைது செய்த போலிஸார் அவரின் கூட்டாளிகள் 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.