மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குல்ஹானே. பாஜக நிர்வாகியான இவர் அக்கட்சியில் நீண்டநாள் உறுப்பினராக இருக்கிறார். மாவு ஆலை நடத்தி வரும் நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு பெதுல் நகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
இவர் சில நாட்களுக்கு முன்னர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், இவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவரை தேடி இவரின் வீட்டுக்குள் சென்ற நிலையில், பயத்தில் தலைமறைவாகியுள்ளார். இதனால் பொதுமக்கள் ஆத்திரத்தில் இவரின் வீட்டின் முன்னர் இருந்த காரை எரித்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
தலைமறைவான அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில், பாஜக பிரமுகர் ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலுக்கு செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.