ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் என்ற பகுதியை சேர்ந்தவர் ரபிதா (22). பழங்குடியின பெண்ணான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான தில்தார் அன்சாரி (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் காதலாக மாறவே இருவரும் திருமணம் செய்ய எண்ணியுள்ளனர்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தில்தார், ரபிதாவை 2-வதாக திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர், சாஹிப்கஞ்ச் பகுதியிலுள்ள போரியோ பிளாக்கின் என்ற இடத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறம் நாய் ஒன்று மனித எலும்பு துண்டுகளை சாப்பிட்டுள்ளது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் அந்த எலும்பு துண்டுகளை மீட்டு ஆய்வுக்கு அனுப்பினர். அப்போது அது மனித எலும்புகள் என்று உறுதியானது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அது ரபிதா என்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து அவரது இரண்டாவது கணவர் அன்சாரியிடம் விசாரிக்கையில், அவரது பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரபிதா துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது அவரது இரண்டாவது கணவர் தில்தாரை கைது செய்துள்ளோம். எங்கள் விசாரணை படி, தில்தாரின் தாயான மரியம் கட்டூன், கடந்த வெள்ளிக்கிழமை ரபிதாவை போரியோ மஞ்ச் தோலாவில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட உடலை அவர்கள் இரும்பு வெட்டும் இயந்திரம் மூலம் துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர்.
தற்போது வரை, ரபிதாவின் ஒரு விரல், ஒரு தோள்பட்டை, ஒரு இடுப்பு, ஒரு கை, கீழ் முதுகு, நுரையீரல், வயிறு என 13 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை ஆய்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எஞ்சிய பாகங்களை தேடி வருகிறோம். இந்த வழக்கு தொடர்பாக தில்தார் மட்டுமின்றி, அவரது தாய் மற்றும் மாமாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ரபிதாவை அவரது கணவனே கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரபிதா நரபலி கொடுக்கப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.