ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் வித்யாதர்நகர் பகுதியில் வசித்து வருபவர் சரோஜ் ஷர்மா (64). முதியவரான இவருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். சரோஜ் ஷர்மாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், சரோஜ் மற்றும் அவரது குழந்தைகள், கணவரது தம்பி மகனான அனுஜ் ஷர்மாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 11-ம் தேதி அனுஜ் காவல் நிலையத்திற்கு பதற்றத்துடன் சென்று ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது பெரியம்மா ஒரு புற்றுநோய் நோயாளி என்றும், படிப்பறிவு இல்லாத அவர் கோயிலுக்கு சென்று வீடு திரும்பவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து கொடுகுக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனுஜ் மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. தொடர் விசாரணையில், கண்காணிப்பில் அனுஜை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இது குறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், "சம்பவம் நடந்த அன்று எனது பெரியம்மாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் ஒரு வேலை காரணமாக டெல்லி செல்ல வேண்டியிருந்தது. வீட்டில் இருந்த அனைவரும் இந்தூரில் உள்ள நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டனர். எனவே வீட்டில் யாரும் இல்லை என்பதால் என்னை டெல்லி போக வேண்டாம் என எனது பெரியம்மா தடுத்து நிறுத்தினார்.
இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகிலிருந்த சுத்தியலால் அவரது தலையில் அடித்து விட்டேன். அதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டார். சடலத்தை மறைப்பதற்காக மார்பில் கட்டர் மிஷினை வைத்து 10 துண்டுகளாக வெட்டி வாளி, சூட்கேஸ், பாலிபேக்குகளில் அடைத்தேன்.
பின்னர் பேக்கிங் செய்யப்பட்ட உடல் பாகங்களை டெல்லி சாலையில் உள்ள மறைவான இடங்களில் புதைத்தும், பல இடங்களில் தூக்கி வீசிவிட்டேன். என் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக போலீசில் புகார் அளித்தேன்" என்றார். அனுஜ் செய்த செயலர்கள் நகர்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன்பேரில் அவரை கைது செய்த காவல் துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.