பீகார் மாநிலம் சரண் என்ற பகுதியில் லகான்ர் என்ற கிராமம் உள்ளது. சம்பவத்தன்று இங்கு வசிக்கும் நபர் ஒருவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக கும்பலாக உறவினர்கள் வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 20 பேர் கொண்ட கும்பல் சாலை ஒர கடை ஒன்றில் இரவு நேர உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே எதிர்பாரா விதமாக அதி வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் சாலையோரம் நின்று சாப்பிட்டு கொண்டிருந்த சுமார் 18 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் மீட்பு குழுவினர் வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த கிராமவாசிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் பேசி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய குற்றவாளிக்கு சட்டப்படி தண்டனை பெற்று தருவதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து கூட்டம் கலைந்து சென்றது.
அதிவேகமாக கார் ஒட்டி வந்த நபர், குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரம் நின்று சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது அதி வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரு உயிரிழந்த நிலையில், 18 படுகாயம் அடைந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.