தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த 'Squid Game' வெப் சீரிஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலகில் அதிகம் பேர் விரும்பி பார்த்த வெப் சீரிஸ் என்ற சாதனையையும் 'Squid Game' படைத்தது.
'Squid Game' வெப் சீரிஸுக்கு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. நெட்ஃபிளிக்ஸில் இதுவரை வெளியான தொடர்களிலேயே மிகவும் ஹிட்டான தொடராக இது உள்ளது. ஒன்பது பாகங்களைக் கொண்ட இந்த தொடர் வெளியான ஒரே மாதத்தில் 111 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்து சாதனை படைத்தது.
இந்த ‘ஸ்குயிட் கேம்’ தொடரில் Player 001 எனும் கேரக்டரில் நடித்த ஓ யோங்-சுவுக்கு 2022ஆம் ஆண்டுசிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக தென் கொரியாவிலிருந்து கோல்டன் குளோப் விருது பெரும் முதல் நடிகர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில் 78 வயதான அந்த நடிகர் தற்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். 2017ம் ஆண்டு ஒரு பெண்ணை தகாத முறையில் தொட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் கடந்த 2021 டிசம்பரில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் உரிய விசாரணை நடைபெறாமல் இந்த வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் வேண்டுகோளை ஏற்று தென்கொரிய நீதிமன்றம் மீண்டும் ஓ யோங்-சுவுக்கு எதிரான பாலியல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் அந்த பெண்ணை தவறான நோக்கத்தில் தொடவில்லை என்று ஓ யோங்-சு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.