பிரபல குளிர்பான நிறுவனமான 'ரஸ்னா' நிறுவனத்தின் தலைவரான அரீஸ் கம்பட்டா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் பலரது வீட்டிலும் குளிர்சாதன பெட்டிகள் (Fridge) இருக்கிறது. ஆனால் முன்பெல்லாம் இது ஒரு சிலர் வீட்டிலேயே இருக்கும். இதுபோன்ற குளிர் சம்மந்தபட்ட பொருட்கள் இல்லாதவர் வீடுகளில் இருக்கும் பலரும் கடைகளிலே குளிர்ந்த பானங்கள் வாங்கி அருந்துவர்.
மேலும் கோடை விடுமுறை காலத்தில் வெயிலில் விளையாட செல்லும் பிள்ளைகளுக்கு எனெர்ஜி கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் 'ரஸ்னா'. இந்த ரஸ்னா பாக்கெட்டாவாகவும், குளிர்பானமாகவும் கிடைக்கும். இதன் விலையும் எளியவர்களுக்கு வாங்கி அருந்தும் வகையில் இருந்தது.
70-களில் தொடங்கி தற்போது வரை இந்த ரஸ்னா நிறுவனம் இயங்கி வருகிறது. எளிய மக்களும் வாங்கும் வகையில், அதிக விலை குளிர்பானங்களுக்கு மாற்றாக ரஸ்னா அறிமுகமானது. வாடிக்கையாளர்களின் வரவேற்பால் இதன் 9 உற்பத்தி நிலையங்கள், இந்தியா முழுவதும் விநியோகிக்க சிறந்த 26 டிப்போக்கள் என நாட்டின் 1.8 மில்லியன் சில்லறை விற்பனை நிலையங்களில் ரஸ்னா விற்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் தலைவர் அரீஸ் கம்பட்டா (Areez Khambatta) தற்போது மாரடைப்பு காரணமாக காலமானார். குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் வசித்து வரும் இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த 19-ம் தேதி தனது 85-வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இந்த நிலையில் அரீஸ் கம்பட்டா இறப்பை குறித்து ரஸ்னா குளிர்பான குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ரஸ்னா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், பெனவலண்ட் டிரஸ்ட்டின் தலைவருமான அரீஸ் கம்பட்டா, 2022 நவம்பர் 19-ம் தேதி காலமானார் என்பதை ஆழந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூக சேவையின் மூலம் இந்தியத் தொழில், வணிகம் மற்றும் மிக முக்கியமாக சமூக வளர்ச்சிக்கு அரீஸ் கம்பட்டா பெரும் பங்களிப்பை அளித்துள்ளார்'' எனத் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.