குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் 100 ஆண்டுகளுக்குப் பழமையானது. இதனால் இந்த பாலத்தைப் பார்வையிடத் தினந்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த பாலம் பழுதடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்குக் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பாலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்துள்ளனர்.
அப்போது திடீரென பாலம் இரண்டாக அறுந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதனால் பாலத்தின் மீது நின்றிருந்த பலரும் தண்ணீரில் விழுந்து மூழ்கினர். மேலும் சிலர் அறுந்து விழுந்த பாலத்தின் கழிறுகளை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாக நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.இந்த விபத்தில் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பாலம் அறுந்து விழும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் பாலத்தில் பலர் நின்று கொண்டிருக்கும்போது திடீரென அறுந்து ஆற்றில் விழும் காட்சி பதிவாகியுள்ளது. அதேபோல் பாலம் மறுசீரமைக்கப்பட்டு நகராட்சியின் அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பாலத்தைப் பராமரித்து வந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த 9 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். அதேபோல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்பி ராஜ்கோடின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாலம் அறுந்து விழுவதை நேரில் பார்த்த விஜய் கோஸ்வாமி, "எனது குடும்பத்துடன் தொங்கு பாலத்திற்குச் சென்றேன். அப்போது பாலத்திலிருந்து சில இளைஞர்கள் வேண்டும் என்றே பாலத்தை ஆட்டிக் கொண்டே இருந்தனர்.
இதனால் நாங்கள் பாலத்திலிருந்து வெளியே சென்றுவிட்டோம். இது குறித்து அங்கிருந்த நிர்வாகிகளிடம் கூறினேன். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவே இல்லை. டிக்கெட் விற்பனை செய்வதில் மட்டுமே குறியாக இருந்தனர். மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாங்கள் பாலத்திலிருந்து வெளியே வந்த சில மணி நேரத்திலேயே அந்த சம்பவம் நடந்தது" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.