பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலிக்கு சர்வதேச அளவில் கோடி கணக்கில் ரசிகர்கள் உண்டு. அதில் ஈரானை சேர்ந்த 19 வயதுடைய சஹர் தபார் என்ற இளம்பெண் ஒருவர் அவருக்கு தீவிர ரசிகையாக இருந்துள்ளார். இதனால் தானும் அவரை போல் மாற வேண்டும் என்று நினைத்த அவர், அதற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார்.
பிறகு அந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த புகைப்படம் பார்ப்பதற்கு ஒரு சாம்பி போன்று பயங்கரமாக இருந்தது. அதோடு தான் வெளியிட்ட புகைப்பட பதிவில், நடிகை ஏஞ்சலினா ஜோலி போல மாறுவதற்காக முக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் பதிவிட்டிருந்தது.
பின்னர் இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவியது. அதோடு வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஈரானில் உள்ள பெண் ஒருவர் செய்த இந்த காரியத்தால் அங்குள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர். அதோடு அவர் மீது புகார்களும் எழுந்தது.
இதையடுத்து, புகைப்படங்களை வெளியிட்ட அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதோடு அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஈரான் நாட்டில் தற்போது ஹிஜாப் விவகாரத்தில் உயிரிழந்த மஹ்ஸா அமினி என்ற பெண்ணுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதன் எதிரொலியாக இந்த பெண், விடுதலையாகியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் உண்மை முகம் வெளியில் தெரிய வந்துள்ளது. முன்னதாக இந்த பெண்ணின் உண்மையான முகம் வெளியில் வராத நிலையில் தற்போது இவரது முகம் வெளியில் வந்துள்ளது. அதோடு தான் வெளியிட்ட புகைப்படமானது தனது உண்மை முகம் அல்ல என்றும், அது மேக் அப் மற்றும் கணினி மூலம் கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது உதடுகளுக்கும், மூக்கிற்கும் அறுவை சிகிச்சை செய்தது உண்மை என்றும், ஆனால் தான் வெளியிட்ட அந்த புகைப்படம் விளையாட்டாக மேக் அப் மற்றும் கணினி மூலம் கொண்டுவரப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
எல்லாவற்றிக்கும் மேலாக அந்த பெண்ணின் உண்மையான பெயர் சஹர் தபார் இல்லை என்றும், அவரது பெயர் ஃபதேமே கிஷ்வந்த் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.