ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 22 வயதான மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை 4 பேர் கொண்ட ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இது குறித்து அந்த பெண் தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இது வெளியே தெரிந்தால் தங்களுக்கு அவமானம் ஏற்படும் என கருதிய அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஹிரன் மங்க்ரி என்ற பகுதியில் அந்த பெண் சுற்றித்திரிந்துதுள்ளார். இளம்பெண் ஒருவர் சாலையில் திரிவதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவலை அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த பெண்ணை மீட்ட போலிஸார் அவரை காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
ஆனால் காப்பகத்தில் இருந்து தப்பிக்க முயன்ற அந்த பெண் சுவற்றை தாண்டும்போது கீழே விழுந்துள்ளார். இதில் அவரின் கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு இளம்பெண்ணுக்கு நடந்த சோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அந்த பெண்ணிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் இதனை வீட்டில் கூறிய நிலையில், அவர்கள் வெளியேற்றியதும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த போலிஸார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளியே தெரிந்தால் அவமானம் ஏற்படும் என கருதி குடும்பத்தினர் பெண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.