ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் வசித்து வருபவர் ஜெகன்நாத்( வயது 22). இவர் தாத்தா கடந்த மாதம் உயிரிழந்த நிலயில், அவரின் இறுதிச்சடங்கிற்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1500 கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கும்போதே இந்த தொகையை 30 நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார்.
30 நாட்கள் கடந்த பின்னர் கடன் கொடுத்தவர் கடன் தொகையை கேட்டு ஜெகன்நாத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அப்போது பணம் இல்லாததால் கடன் கொடுக்க கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அதனை மறுத்த கடன் கொடுத்தவர் வித்தியாசமான தண்டனை ஒன்றை ஜெகன்நாத்துக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி, ஜெகன்நாத் கையில் கயிற்றை கட்டி கயிற்றின் மற்றொரு முனையை தனது இருசக்கர வாகனத்தில் கட்டி ஜெகன்நாத்தை இருசக்கர வாகனத்தின் பின்னால் இழுத்துச்சென்றுள்ளார். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மக்கள் அதிகம் இருக்கும் சாலையில் ஜெகன்நாத் இழுத்துச்செல்லப்பட்ட நிலயில், அங்கு இருந்தவர்கள் ஜெகன்நாத்தை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெகன்நாத் அந்த பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் கொலை முயற்சி, கடத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து கடன் கொடுத்தவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் நண்பரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், ஜெகன்நாத் இருசக்கர வாகனத்தின் பின்னால் இழுத்துச்செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைக் கண்ட பலரும் இந்த விவகாரத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.