பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.
ஆளுநர்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்குக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.
சமீபத்தில் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய வரலாற்று கருத்தரங்கில் தன்னை தாக்க முயன்றதாக கேரள ஆளுனர் ஆரிப் முகம்மதுகான் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், கேரள அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முழு உரிமை உண்டு. ஆனால், அமைச்சர்களின் தனிப்பட்ட அறிக்கைகள் மூலம் ஆளுநர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டால் அவர்களின் பதவியை திரும்பபெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவையில் முதல்வர் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற நிலையில், அதில் தலையிடுவது போல ஆளுநர் மிரட்டல் விடுத்துள்ளது அரசையலமைப்பு சட்டத்தையே மீறும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினர் ஆளுநரின் செயலை விமர்சித்து வருகின்றனர்.