இமாலயத்தில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் 23 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் பனிச்சிகரம் அமைந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இந்த எல்லைப்பகுதி அமைத்துள்ளது.
1984ம் ஆண்டு இந்த பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. இதையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் மேஹதூத் மூலம் பாகிஸ்தான் படைகளை அங்கிருந்து விரட்டியடித்து சியாச்சின் மலைத் தொடர் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதுவரை இந்த பகுதி இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
இந்த போர் நடைபெற்றபோது ஆபரேஷன் மேஹதூத் திட்டத்தில் அப்பகுதியில் 20 இந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இவர்கள் பனி புயலில் சிக்கி உயிரிழந்தனர். இதில் 15 வீரர்களின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது. ஆனால் 5 பேரின் உடல் மீட்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ராணுவ வீரரின் உடலை இந்திய ராணுவம் கண்டெடுத்துள்ளது. அந்த ராணுவ வீரர் சந்திரசேகர் ஹர்போலா என அடையாளம் கண்டுள்ளனர்.
இவரை அடையாளம் காண்பதற்கு அவர் அணிந்திருந்த ராணுவ எண்கொண்ட சங்கிலேயே உதவியுள்ளது. இதையடுத்து அவரது உடலை மலையிலிருந்து கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
இது குறித்து சந்திர சேகர் ஹர்போலாவின் மனைவி சாந்தி தேவி கூறுகையில், "எனது கணவர் 1984 ஆண்டு ஜனவரியில் வீட்டிற்கு வந்தார். பின்னர் மீண்டும் ராணுவத்திற்கு பணிக்குச் சென்றார். விரைவில் வீட்டிற்குத் திரும்புவதாக உறுதியளித்தார். குடும்பத்திற்கு அளித்த வாக்குறுதிகளை விட நாட்டிற்காகத் தனது உயிரைக் கொடுத்த கணவரை நினைத்துப் பெருமைப்படுவதாக" கூறியுள்ளார்.