நாடு முழுவதும் இன்று 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லியில் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
அதேபோல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தலைமைச் செயலக்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். இதேபோல் மற்ற மாநில முதல்வர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என பலரும் தேசியக் கொடியை ஏற்றி விடுதலை போராட்டத்தில் வீர மரணம் அடைந்த தியாகிகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
முன்னதாக ஆகஸ்ட் 13ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனவும் சமூகவலைதளங்களில் தங்களின் DP-யில் தேசியக் கொடியை வைக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து சினிமா நட்சத்திரங்கள் முதல் பொதுமக்கள் வரை தேசியக் கொடியை தங்களில் வீடுகளில் ஏற்றி நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ராணுவத்தையும், நாட்டுப்பற்றையும் அரசியலாக்கக் கூடாது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய,"அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்," நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது.
ஏற்கனவே ஒருகட்சி, ஒரு மதத்தை அவர்களது சொத்துபோல இழுத்தது போன்று நாட்டையும் ராணுவத்தையும் அவர்களது சொத்துபோல் இழப்பது நாட்டிற்கு நல்லது அல்ல. நாமும் பாகிஸ்தால்போல் மாறக்கூடாது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது" என தெரிவித்துள்ளார்.