மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.
அதேபோல் பொருளாதாரமும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் வேலைலும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்ற வற்றின் விலைகளை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது. இந்நிலையில், இளைஞர்கள் இடையேயான வேலையின்மை விகிதத்தில் உலகிலேயே மோசமான இடத்தில் இந்தியா இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்கான வேலையின்மை குறித்த அந்த வரைபடத்தில் உலகிலேயே இந்தியாவில்தான் இளைஞர்களிடையேயான வேலையின்மை அதிகபட்சமாக 28.3 சதவிகிதம் என்ற அளவிற்கு உள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரிவினரில் உலகிலேயே குறைந்தபட்சமாக ஜப்பானில் 4.4 சதவிகிதமும், ஜெர்மனியில் 6.9 சதவிகிதமாகவும், இஸ்ரேலில் 8.8 சதவிகிதமாகவும் வேலையின்மை இருக்கிறது. அதேபோல் பாகிஸ்தானில் 9.4 சதவிதமாகவும், நேபாளத்தில் 9.5 சதவிகிதமாகவும், அமெரிக்காவில் 9.6 சதவிகிதமாகவும் இருக்கிறது.
மக்களின் எதிர்பார்ப்பு வீட்டுக்கு வீடு வேலைவாய்ப்பு என்பதாகவும் உண்மையோ வீட்டுக்கு வீடு வேலையின்மை என்பதாகவுமே உள்ளது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். பல்வேறு நாட்டு இளைஞர்கள் மத்தியில் நிலவும் வேலையின்மை குறித்து உலக வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தனது ட்விட்டர் பக்கத்தில் வரை படம் ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். இவ்வளவு ஏன் கடுமையான பொருளாதார பிரச்சனைகளை சந்தித்துள்ள இலங்கையில்கூட 26.1 சதவிகிதமாகவே 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களிடையே வேலையின்மை இருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, உலகிற்கே தலைமை தாங்கும் இடத்தில் (விஸ்வகுரு) உள்ளதாக மோடி கூறும் இந்திய இளைஞர்களின் நிலை இதுதான் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில், வீட்டுக்கு வீடு வேலைவாய்ப்பு என்பதுவே மக்களின் எதிர்பார்ப்பாகவும், மக்களின் தேவையாகவும் உள்ளது. ஆனால் உண்மையில், வீட்டுக்கு வீடு வேலை யின்மை நிலையே உள்ளது” எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்