மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.
அதேபோல் பொருளாதாரமும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் வேலைலும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்ற வற்றின் விலைகளை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது.
இந்நிலையில் மோடி அரசின் இந்த ஆண்டு இறுதி பரிசுகளை அனுபவிப்போம் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பர் தனது ட்விட்டரில் ஒன்றிய அரசை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டரில்,"மோடி அரசின் இந்த ஆண்டு இறுதி பரிசுகளை அனுபவிப்போம். சில்லறை பணவீக்கம் 4.91 சதவீதம், எரிபொருள் விலை 13.4 சதவீதம் உயர்வு, வேலையின்மை வீதம் 8.53 சதவீதமாக அதிகரிப்பு, நகர்ப்புறங்களில் வேலையின்மை வீதம் 10.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வங்கிகள் 2020-21ல் ரூ.2,02,783 கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 800 கோடி வாராக்கடன் இருக்கிறது. இதில் 13 கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 820 கோடியாகும். பொதுத்துறை வங்கிகளுக்கு இழப்பு மட்டும் ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்து 980 கோடியாகும்” என தெரிவித்துள்ளார்.