கர்நாடகா மாநிலம் கோப்பல் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் கோவில் ஒன்றிற்கு மகன் ஒருவன் தனது 80 வயது மதிக்கத்தக்க தாயை அழைத்து சென்றுள்ளார். அப்போது கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு, தனக்கு வேலை இருப்பதாக தாயிடம் மகன் கூறியுள்ளார்.
தாயோ சிறிது பயப்பட, இங்கேயே இருங்கள், நான் வந்து அழைத்து செல்கிறேன் என்று கூறி தன்னிடம் இருந்த ஒரு மொபைல் போனை தாயிடம் கொடுத்துள்ளார். மேலும் ஒரு துண்டு சீட்டில் தனது மொபைல் எண்ணையும் எழுதி கொடுத்துள்ளார்.
மகன் அந்த இடத்தை விட்டு சென்றது அந்த முதிர்த்தாய், கோவிலில் உள்ள ஒரு மூலையில் போய் அமர்ந்துள்ளார். பிறகு நீண்ட நேரமாகியும் தனது மகன் வரவில்லை என்பது தெரிந்தும், மகனுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்துள்ளார்.
இவரை கண்ட அங்கிருந்த பக்தர்கள் சிலர், அந்த மூதாட்டி அருகே சென்று விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நடந்தவற்றை கண்கலங்கி கூறிய அந்த தாய், தனது மகன் வருவான் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இதையடுத்து அவரது கையில் இருந்த மொபைல் போனை கொடுத்து தனது மகனை தொடர்பு கொண்டு தருமாறு தாய் கேட்டுள்ளார்.
அப்போது அதனை வாங்கி பார்த்தவர்கள், அதில் சிம் கார்டு இல்லை என்பதை கண்டறிந்தனர். மேலும் அந்த துண்டு சீட்டில் மகனின் போன் நம்பரை எழுதி கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது மகன் அவரை வேண்டுமென்றே விட்டு சென்றுள்ளதாக தாயிடம் கூறினர். பின்னர் அவர் மேல் பரிதாபப்பட்ட பக்தர்கள் அவருக்கு பொருத்திக்கொள்ள போர்வையும், சாப்பிட உணவும் அளித்து விட்டு, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், "நாங்கள் தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மூதாட்டியிடம் விசாரித்தோம். அப்போது அவர், தான் அதே மாநிலத்திலுள்ள உஜ்ஜினி பகுதியை சேர்ந்தவர் என்றும், தனது பெயர் காசிம் என்றும், தனது மகன் என்னை இங்கே விட்டுவிட்டு சென்றதாகவும், மீண்டும் வருவான் என்றும் தெரிவித்தார். மேலும் மற்ற விவரங்கள் குறித்த கேள்விக்கு அவருக்கு விவரங்கள் எதுவும் தெரியாததால் சரிவர பதிலளிக்கவில்லை. இதனால் மூதாட்டியின் குடும்பத்தாரை தொடர்புகொள்ள முடியவில்லை" என்றனர்.
பின்னர் அவர்கள் முதியோர் உதவி எண்ணிற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததையடுத்து, தேசிய முதியோர் உதவி எண் மண்டல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மூதாட்டியை முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்றதாகவும், தாயை தனியே தவிக்கவிட்டு சென்ற மகனை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.