மேற்குவங்க மாநிலம், தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த வியாழனன்று வகுப்புக்கு வராமல் இருந்துள்ளார். பின்னர் அந்த மாணவி அடுத்தநாள் வகுப்புக்கு வந்துள்ளார்.
அப்போது வகுப்பு வந்த மாணவியை அப்பள்ளி ஆசிரியை கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்துச் சம்மந்தப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவியைத் தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு திடீரென அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து மாணவியை அடித்த ஆசிரியை தாக்கியுள்ளனர். மேலும் அவரது ஆடைகளையும் கிழித்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி சமாதானப் படுத்தியுள்ளனர். பின்னர் பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
தற்போது ஆசிரியை தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து மேற்குவங்கத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.