கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனது சொந்த அண்ணனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இது பற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் கருவைக் கலைக்க நினைத்துள்ளனர். ஆனால் 30 வாரம் கடந்து விட்டதால் கருவைக் கலைப்பதில் சிக்கல் உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் சிறுமியின் பெற்றோர் கேரள உயர்நீதிமன்றத்தில் கருவைக் கலைக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ஜி. அருண், சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக நிறுத்த அனுமதி அளித்தார்.
மேலும் இந்த வழக்கைக் குறித்து பேசிய நீதிபதி, "இப்படியான குற்றங்களுக்கு நெருங்கிய உறவினர்களே காரணமாக இருக்கிறார்கள். இணையதளம், சோஷியல் மீடியாவால் இளம் தலைமுறையினர் தவறான எண்ணங்களை மனதில் வளர்த்து கொள்கின்றனர். இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொடுப்பது அவசியம்.
மேலும் பள்ளியில் கற்பிக்கப்படும் பாலியல் கல்வி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாலியல் தொடர்பான விஷயங்களில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.