கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு பிரிவு எஸ்.பி.யாக இருப்பவர் நவநீத் ஷர்மா. உயரதிகாரி வீட்டிற்கு பாதுகாப்பு பணிக்கு காவல்துறையினர் யாரவது நியமிப்பது வழக்கம். அதன்படி காவல்நிலையத்தில் வேலை செய்யும் ஆகாஷ் என்பவர் எஸ்.பி வீட்டுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று எஸ்.பி. வீட்டில் இருந்தவர்கள், அவர்கள் வளர்த்து வரும் செல்ல நாயை குளிப்பாட்டி விடுமாறு கூறியுள்ளனர். அதற்கு இவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் மிரட்டியும் பார்த்துள்ளனர். அப்போதும் தனக்கு இதில் விருப்பமில்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து, எஸ்.பி.,யிடம் வீட்டினர் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த எஸ்.பி., வேறு பொய்யான காரணத்தை கூறி, காவலாளி ஆகாஷை சஸ்பெண்டு செய்வதாக மிரட்டியுள்ளார். மேலும் அதன்படி, எஸ்.பி. வீட்டில் ஆகாஷ் பொருட்களை சேதப்படுத்தியதாக பொய்யான காரணத்தை கூறி சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீது புகாரும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி, எஸ்.பி. தன்னை சஸ்பெண்டு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஆகாஷ் டி.ஜி.பி.,-யிடம் புகார் அளித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட டி.ஜி.பி., இது குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார். விசாரித்ததில், ஆகாஷ் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவலர் ஆகாஷின் சஸ்பெண்டை ரத்து செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டார். மேலும் அவர் திருவனந்தபுரம் நகர காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். காவல்துறையில் உயரதிகாரிகள், தங்கள் கீழ் பணிபுரியும் காவலர்களை இப்படி துன்புறுத்துவது குறித்து இந்தியாவில் பல நடவடிக்கைள் எடுத்து வரும் நிலையில், கேரளாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.