கடந்த சில நாட்களாகவே Whatsapp குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் FASTAG குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதாவது, அந்த வீடியோவில் டோல் கேட்டில் கார் ஒன்று நிற்கிறது. அதன் அருகே வந்து "கண்ணாடியைத் துடைக்கட்டுமா" என்று ஒரு சிறுவன் காரில் இருப்பவர்களிடம் வந்து கேட்கிறான். அவர்களும் அதற்கு சரி என்று சொல்ல, பின் காரை துடைத்துவிட்டு அந்த சிறுவனும் சென்று விடுகிறான். இதையடுத்து அந்த காரும் அங்கிருந்து நகர்ந்து விடுகிறது. சிறிது நேரத்திலேயே அவர்களின் ’FASTAG’-ல் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து மீண்டும் அதே காரில், அதே டோல்கேட்டுக்கு செல்லும்போது, அதே சிறுவன் வந்து அதே போல் "கண்ணாடியைத் துடைக்கட்டுமா" என கேட்கிறான். இவர்களும் சரி என்று சொல்ல, இந்த முறை சந்தேகம் வலுத்ததால் அனைவரும் மிகவும் உன்னிப்பாக அந்த சிறுவன் துடைப்பத்தை கவனிக்கிறார்கள்.
அப்போது அந்தச் சிறுவன் கையில் வாட்ச் வடிவிலான ஒரு டிஜிட்டல் சாதனம் இருப்பதை கண்டனர். கையில் உள்ள துணியால் கார் கண்ணாடியை துடைப்பது போல், அந்த சாதனத்தை வைத்து காரில் இருக்கும் FASTAG கோடின் மீது தேய்க்கிறான்.
இந்த காட்சிகள் அனைத்தையும் ஒரு வீடியோவாக எடுத்து, இப்படி சிறு குழந்தைகளை வைத்தும் பணப்பறிப்பு மோசடி நடைபெறுவதாக ஒருவர் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலானதையடுத்து பொதுமக்கள், FASTAG பயனர்கள் பீதியடைந்தனர்.
இதையடுத்து, இந்த வீடியோவில் இருக்கும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என்று PAYTM நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதாவது "ஸ்மார்ட் வாட்ச்சை வைத்துக்கொண்டு FASTAG-ஐ ஸ்கேன் செய்வதாக அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது முற்றிலும் தவறானது.
NETC-யின் படி, அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களால் மட்டுமே FASTAG பரிவர்த்தனைகளை செயல்பட வைக்க முடியும். இதனை நாங்கள் பலமுறை சோதித்து இருக்கிறோம். PAYTM FASTAG என்பது மிகவும் பாதுகாப்பான ஒன்று" என்று விளக்கமளித்துள்ளனர்.