கடந்த 2015ம் ஆண்டு தொலைதொடர்பு துறையில் அறிமுகமான ஜியோ நிறுவனம் இந்திய தொலைதொடர்பு துறையையே அசைத்துப் பார்த்தது. இதன் வருகை காரணமாக போட்டி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது.
ஏர்செல் போன்ற நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க முடியாமல் நிறுவனத்தை மூடியநிலையில், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் இணைந்து இந்த போட்டியை சமாளித்தன.
ஆரம்பத்தில் இலவசமாக இணைய சேவையை தொடங்கிய ஜியோ, போட்டி நிறுவனங்கள் விலகிய பின்னர் தனது கார்பரேட் விளையாட்டை ஆரம்பித்தது. சிறிது சிறிதாக விலையை ஏற்றிய ஜியோ நிறுவனம் தற்போது தொலைதொடர்பு சந்தையில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜியோவின் இயக்குநர் பதவியில் இருந்து முகேஷ் அம்பானி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், புதிய இயக்குனராக அவரது மகன் ஆகாஷ் அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை ஜியோ நிறுவனத்தின் இயக்குனர் குழுவும் அங்கீகரித்துள்ளது.
பெட்ரோல், சில்லரை வர்த்தகம், தொலைதொடர்புத்துறை போன்று பல்வேறு துறைகளில் தனது இறக்கைகளை விரித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ள இந்த மாற்றம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதவியை ராஜினாமா செய்த முகேஷ் அம்பானி அடுத்ததாக வேறு துறையில் தன்னை ஈடுபடுத்தபோகிறாரா அல்லது வாரிசுக்கு வழிவிட விலகி நிற்கிறாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.