மங்கோலியா நாட்டைச் சேர்ந்த புத்தமத குருவான சுலுகு (44) என்பவர், தனது நண்பர் ஒருவருடன் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருக்கிறார். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்ற இவர்கள், அங்கே சுற்றிப்பார்த்து முடித்து விட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்குச் சென்றுள்ளனர்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சுற்றி பார்க்க ஏராளமான இடம் இருக்க, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அங்கிருந்த ஜன்பத் அங்காடிக்குச் சென்றுள்ளனர். அப்போது பொருட்கள் வாங்கி கொண்டிருக்கையில், அங்கு வந்த இரண்டு பேர் தங்களை 'போலிஸ்' என கூறி அவர்களிடம் அறிமுகப்டுத்திக்கொண்டனர். பின்னர் அவர்களையும், அவர்கள் கொண்டு வந்த பைகளையும் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட புத்த குருமார்கள், தாங்கள் கொண்டுவந்த 100 டாலர், 300 யூரோ மற்றும் ரூ.10,500 மதிப்புள்ள நகைகளை மர்ம கும்பல் எடுத்துச் சென்றுவிட்டதாக காவல்துறையில் புகாரளித்தனர். அவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், அந்த விற்பனை அங்காடியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.