மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி என்ற மாவட்டத்தில் வசித்து வருபவர் மாணிக் மற்றும் போபட் யல்லபா வான்மோர். நெருங்கிய சகோதரர்களாக இருக்கும் இவர்கள், சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். மூத்த சகோதரனான மாணிக் ஒரு கால்நடை மருத்துவர்.
இந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி இவர்கள் இருவரின் வீடுகளும் திறக்காமல் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் கதவை தட்டியுள்ளனர். இருப்பினும் கதவு திறக்கப்படாததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாங்லி மாவட்ட காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அந்த குடும்பத்தினர் அனைவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஒரு வீட்டில் மாணிக், அவரது தாய், மனைவி, இரு குழந்தைகள் ஆகியோர் இறந்து கிடைக்க, மற்றொரு வீட்டில் போபட், அவரது மனைவி,இரு குழந்தைகள் ஆகியோரின் சடலமும் கிடைத்துள்ளது.
பின்னர் இவர்கள் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிய காவல்துறையினர், இது தற்கொலையா? அல்லது திட்டமிட்ட கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சகோதரர்கள் இருவரும் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனை திரும்ப செலுத்த முடியாததால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியானது. அதோடு இது தொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்,13 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் விஷம் சாப்பிட்டு இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேற்கொண்டு விசாரணை செய்த காவல்துறையினர், அந்த பகுதியை சேர்ந்த மந்திரவாதியான தீரஜ் சந்திரகாந்த் (39) மற்றும் அவரது டிரைவர் அப்பாஸ் முகமது அலி பகவான் (48) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அப்பாஸ், இறந்த குடும்பத்தினரிடம் வீட்டில் புதையல் இருப்பதாக கூறி, ரூ.1 கோடி வாங்கியுள்ளார். ஆனால் புதையலை கண்டுபிடித்து தராததால் வாங்கிய பணத்தை குடும்பத்தினர் திரும்ப கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பாஸ் முகமது அலி பகவான் கடந்த ஜூன் 19 ஆம் தேதி புதையலைக் கண்டுபிடிக்க சில சடங்குகளைச் செய்ய வேண்டும் என கூறி ஒவ்வொருவராக மாடிக்கு வரவழைத்து விஷம் கலந்த தேநீரை கொடுத்து கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.