உலகம் முழுவதும் மின்சார வாகனத்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு அதிகரித்து வரும் எரிபொருளின் விலையும் காரணமாக அமைந்துள்ளது. இந்தியாவில், OLA உள்ளிட்ட நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. அதேபோல இந்தியாவில் மின்சார கார்களும் விற்பனையாகிறது. இந்த வாகனங்களை வாடிக்கையாளர்கள் பலரும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், அடிக்கடி மின்சார ஸ்கூட்டர்கள் தீ பிடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே வருவது மின்சாரம் வாகனங்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மின்சார ஸ்கூட்டரை போல் மும்பையில் மின்சார கார் ஒன்று முதல் முறையாக தீ பிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஒருவர் நெக்ஸான் மின்சார காரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரின் அலுவலகத்தில் காருக்கு சார்ஜ் செய்துள்ளார். பிறகு அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் காரில் சிறிது தூரம் சென்ற பிறகு அலார ஒலி எழுந்துள்ளது. உடனே காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார். இதையடுத்து உடனே கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். காரில் எழுந்த அலார ஒலி கேட்டு வெளியே வந்ததால் அதன் உரிமையாளர் உயிர் தப்பினார்.
டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான நெக்ஸான் மாடல் மின்சார வாகனம் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையாகியுள்ளது. ஆனால் முதல் முறையாக தற்போது தான் மின்சார வாகனம் தீ பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து வாகனம் தீ பிடித்தற்கான காரணம் குறித்து போலிஸார் மற்றும் டாடா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.