நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அவர்களை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதனொரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சஹாரன்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. இதில் கடந்த வெள்ளிக்கிழமை மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் நடந்த போராட்டத்தின் போது உத்தரப்பிரதேச காவல்துறையினர் இதுவரை சுமார் 300 பேரை கைது செய்துள்ளனர்.
அதோடு நின்றுவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளியுள்ளனர். முஸ்லிம்களின் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய பிரக்யா ராஜின் கரேலி பகுதியில் அமைந்துள்ள ஜேகே ஆஷியானா காலனியில் வசிக்கும் ஜாவேத் முஹமது என்ற நபரின் வீடு புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டது.
முஹமதுவின் மகளும் சமூக ஆர்வலருமான அஃப்ரீன் பாத்திமா, தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகள் அஃப்ரீன் பாத்திமா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஆவார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவியும் ஆவார். அவர் அப்பல்கலைக்கழங்களில் பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஆதரவாக, ஜே.என்.யூ வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.