இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்கள், மத வெறுப்பு பேச்சுக்களை பா.ஜ.க தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தொடர்ந்து பேசிவருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில், பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் நாயகம் குறித்துப் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த மத வெறுப்பு பேச்சுக்கு அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் இந்திய நாட்டிற்குப் பெரிய அவமதிப்பாகிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல் அரபு நாடுகளும் நபிகள் குறித்துப் பேசிய நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் நுபுர் சர்மாவைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் இன்று தொழுகையை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், கர்நாடகா, தெலங்கானா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.