பெற்றோர் பிள்ளைகள் இடையே வழக்கமாக சொத்து பிரச்னை வருவது வழக்கம். ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வயதான தம்பதியர் தங்களது பேரன் பேத்தி பெற்றுத் தராத மகன், மருமகள் மீது புகார் கூறி ஹரித்வார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.
மேலும், ஒரு ஆண்டிற்குள் குழந்தை பெற்றுத் தராவிட்டால் 5 கோடிரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BHEL நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சஞ்சீவ் ரஞ்சன் பிரசாத். இவர் தனது மனைவி சாத்னா பிரசாத்துடன் உத்தரகாண்டில் வசித்து வருகிறார்.
இவர்களது ஒரே மகனான ஷ்ரே சாகருக்கு கடந்த 2016ம் ஆண்டு நொய்டாவைச் சேர்ந்த ஷுபாங்கி சின்ஹா என்ற பெண்ணை மணமுடித்து வைத்திருக்கிறார்கள்.
சாகரை விமானி பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்து படிக்க வைத்ததோடு, திருமணத்துக்கு பிறகு அவர்கள் இருவரையும் தேனிலவுக்காக 5 லட்சம் ரூபாய் செலவிட்டு தாய்லாந்துக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள் பிரசாத் தம்பதி.
“என்னிடம் இருந்த எல்லா பணத்தையும் என் மகனின் நலனுக்காக கொடுத்துவிட்டேன். தற்போது என்னிடம் எதுவும் இல்லை. வீடு கட்டுவதற்காக வங்கியில் கடனும் வாங்கப்பட்டிருக்கிறது. இதனால் பொருளாதார ரீதியில் கடுமையாக அவதிப்பட்டு வருகிறது.
நொய்டாவில் தங்கி பணியாற்றி வரும் மகன், மருமகள் இருவரும் தலா 2.5 கோடி என 5 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் இல்லையே ஓராண்டிற்குள் குழந்தை பெற்றுத் தர வேண்டும். ஏனெனில் இதனால் நாங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.