மத்திய பிரதேச மாநிலம் சித்து மாவட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லா மற்றும் அவரது மகன் குரு தத் குறித்து அநாகரீகமான கருத்துகளை தெரிவித்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பிரபல நாடகவியாளர் நீரஜ் குந்தர் என்பவரை போலிஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நீரஜ் குந்தர் கைது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளூர் பத்திரிகையாளர் மற்றும் யூடியூபரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகக் கூறி போலிஸார் அவர்களை கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக யூடியூபர் கனிஷ்க் திவாரி கூறுகையில், நாங்கள் கோட்வாலி காவல்நிலையத்திற்குச் சென்றிருந்தோம். ஆனால் எங்களை போலிஸார் கைது செய்து 18 மணி நேரம் லாக்-ஆப்பில் வைத்திருந்தனர்.
அப்போது எதற்காக கைது செய்தீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு எங்களை தாக்கி அதிகார துஷ்பிரயோகம் செய்யதனர். மேலும் எங்கள் ஆடைகளை கழற்றி அரை நிர்வாணமாக நிற்க வைத்தனர் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் கண்டனங்களைக் கிளப்பியுள்ளது.