இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு வலதுசாரி கும்பல் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில், கர்நாடகாவில் கடந்த பிப்ரவரி மாதம் பர்தா- ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகளை தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு தடை விதிக்கவேண்டும், மேலும் மசூதிகளில் ஒலிபெருக்கியை நீக்கவேண்டும் என வலதுசாரி கும்பல்கள் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், சமீபத்தில் மிக்சர் பாக்கெட்களில் உருது மொழி ஏன் அச்சிடப்பட்டுள்ளது என நிருபரே கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. டெல்லியில் ஹல்திராம் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை நிலையம் ஒன்றில், செய்தியாளர் ஒருவர் மிக்சர் பாக்கெட்டில் உருது மொழி ஏன் அச்சிடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு கடைக்காரர் பிடித்திருந்தால் வாங்குங்கள் இல்லையென்றால் வாங்க வேண்டாம் என பதிலளித்திருக்கிறார். ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து அந்த பெண் நிருபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெண் நிருபரின் கருத்துக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது.
மேலும் இதுதொடர்பாக வீடியோவை பகிர்ந்துள்ள பலரும் உருதுமொழி இருக்கிறது என்றால், இந்திய ரூபாயைத்தான் முதலில் புறக்கணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் பொருட்களில் பாகுபாடு காட்டுவது முட்டள்தனம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.