உகாதி பண்டிகையை முன்னிட்டு புதிதாக வாங்கிய புல்லட் வண்டிக்கு பூஜை போட கர்நாடகாவின் மைசூரில் இருந்து ஆந்திராவுக்கு வந்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.
கோவிலை வந்தடைந்த போது வண்டியை வித்தியாசமாக ஒலி வந்ததை கேட்ட ஓரம்கட்டிய நேரத்தில் திடீரென, புல்லட் வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்துச் சிதறியிருக்கிறது.
இந்த சம்பவம் ஆந்திராவின் கசாபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று நடந்திருக்கிறது. ரவிச்சந்திரா என்ற நபர்தான் மைசூரில் இருந்து கசாபுராவிற்கு தனது புதிய புல்லட்டில் வந்திருக்கிறார்.
வழியில் எங்கேயும் நிறுத்தாமல் நேராக ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்திருக்கிறார். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்து முதலில் புகை கிளம்பியிருக்கிறது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பயத்தில் சற்று ஒதுங்கிச் சென்றிருக்கிறார்.
அந்த சமயத்தில் திடீரென எதிர்பாராத விதமாக ரவிச்சந்திராவின் புல்லட் வண்டியின் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் வண்டியின் பாகங்கள் தீப்பிடித்து சிதறியிருக்கிறது.
இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த மக்கள் வீடியோவாக எடுத்திருக்கிறார்கள். இதனிடையே, கூட்டத்தில் இருந்த சிலர் புல்லட்டில் பற்றிய தீயை அணைக்க தண்ணீரை ஊற்றியிருக்கிறார். இருப்பினும் இந்த விபத்தின் போது நல்வாய்ப்பாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர், போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், புல்லட் வாகனம் தீப்பிடித்து எரிந்ததன் காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும், வெகுதூரம் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர் ஆங்காங்கே வழியில் நிறுத்தி சில நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு பயணத்தை தொடரலாம் எனவும் போலிஸார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.