கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றிலிருந்து 37 மாணவர்கள் கோவாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்தில், சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் மூன்று ஆசிரியர்களும் உடன் இருந்துள்ளனர்.
இதையடுத்து இவர்கள் கோவா சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று மாலை கண்ணூர் நோக்கி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். பிறகு கோவா பனாஜி என்ற பகுதிக்கு பேருந்து வந்தபோது திடீரென பேருந்தின் பின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
இதை கவனித்த மாணவர்கள் உடனே பேருந்தை நிறுத்தி என்னவென்று பார்ப்பதற்குள் பேருந்து திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அச்சமடைந்த மாணவர்கள் உடனே பேருந்தை விட்டு வெளியேறினர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து நாசமான. மேலும் பேருந்தில் சிக்கிக் கொண்ட மாணவர்களின் பொருட்கள் அனைத்தும் எரிந்து கருகியது.
இந்த விபத்து குறித்து கோவா போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மாணவர்கள் தீ பிடிப்பதை உடனே கவனித்து வெளியேறியதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.