தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான்கு நாள் அரசு முறைப் பயணமாக தற்போது டெல்லியில் உள்ளார் என்பதை அறிவோம். இந்த நிலையில் நேற்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
அதுமட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்களுடன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியில் உள்ள ஒவ்வொரு வகுப்பாகச் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில் ஒரு சுவாரசியமான சம்பவம் அங்கு நடந்தது.
அது என்னவென்றால், டெல்லி முதலமைச்சர் அப்பள்ளி ஒன்றின் மாணவ - மாணவிகளிடம் “இவர் தமிழ்நாடோட சீஃப் மினிஸ்டர், உங்களுக்குத் தெரியுமா’’ என்ற கேள்வியைக் கேட்டார். அதற்குப் பள்ளி மாணவர்கள் எல்லாருமே “எங்களுக்குத் தெரியும்” என்று பதில் சொன்னார்கள்.
அது தவிர, “டெல்லிப் பள்ளிகளில் எந்த மாதிரியான கல்விமுறை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது?” என்று கேட்க, வகுப்பறையில் இருந்த ஒவ்வொரு மாணவியும் எழுந்து அவர்களது கல்வி முறையைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விளக்கிக் கூறினார்கள்.
அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடனிருந்தார்.