முரசொலி தலையங்கம்

பிரதமரிடம் ‘அரசியல்’ அல்ல.. ‘வளர்ச்சி'யைப் பற்றி பேசி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முரசொலி !

பா.ஜ.க.வின் பாதம் தாங்கிய பழனிசாமி தனது கோரிக்கைக்காக டெல்லியில் தெண்டனிட்டுக் கிடந்தாரே தவிர, தமிழ்நாட்டுக்காக என்றாவது கோரிக்கை வைத்தது உண்டா? இல்லை!

பிரதமரிடம் ‘அரசியல்’ அல்ல.. ‘வளர்ச்சி'யைப் பற்றி பேசி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு எதிர்பார்க்கும் கோரிக்கைகளை மிகப்பெரிய பட்டியலாகப் போட்டுக் கொடுத்துள்ளார்கள். 14 தலைப்புகளில் துறைவாரியாக அந்தக்கோரிக்கைகள் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

நீர்வளம், மீன்வளம், எரிசக்தி, நிதி, சுகாதாரம், வேளாண்மை, தொழில்கள், பள்ளிக்கல்வி, சென்னை மெட்ரோ ரயில், பிற்படுத்தப்பட்டோர் நலன், பொதுப்போக்குவரத்து, சுற்றுச்சூழல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகிய தலைப்புகளில் இவை அமைந்துள்ளன.

இன்றைய தினத்தில் டெல்லி, தமிழ்நாட்டுக்குச் செய்ய வேண்டிய கோரிக்கைகள், செயல்படுத்தித் தர வேண்டிய திட்டங்கள் இவைதான். “தமிழ்நாட்டை நாங்கள் புறக்கணிக்கவில்லை'' என்று சொல்லக்கூடிய தமிழக பா.ஜ.க. தலைவர்கள், இந்தத் திட்டங்களைப் பெற்றுத் தருவதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

மாறாக, அவதூறுகளின் மூலமாக அரசியல் நடத்துவதற்கு முனையக் கூடாது. இந்தியப் பிரதமரிடத்தில் ‘அரசியல்' பேசவில்லை முதலமைச்சர். ‘வளர்ச்சி'யைப் பற்றித் தான் பேசி இருக்கிறார். இந்தியப் பிரதமரிடம் யாரைப் பற்றியும் குறை சொல்லவில்லை முதலமைச்சர். தமிழ்நாடு நிறைவடைய என்னென்ன தேவை என்பதைத்தான் கேட்டுள்ளார். எந்த உள்நோக்கத் துடனும் பிரதமரைச் சந்திக்கவில்லை முதலமைச்சர். தமிழ்நாட்டின் நலனுக்காகவே சந்தித்துள்ளார்.

‘தான் திருடி பிறரை நம்பமாட்டார்' என்பதைப் போல, பிரதமருடனான முதலமைச்சரின் சந்திப்பைக் கொச்சைப்படுத்தி பழனிசாமி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சசிகலாவின் காலைத் தாங்கிப் பதவியைப் பெற்று, அந்தக் காலை வாரி விட்டு, அடுத்து பா.ஜ.க.வின் பாதம் தாங்கிய பழனிசாமிக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்றாவது கவலை இருந்ததா? தனது கோரிக்கைக்காக டெல்லியில் தெண்டனிட்டுக் கிடந்தாரே தவிர, தமிழ்நாட்டுக்காக என்றாவது கோரிக்கை வைத்தது உண்டா? இல்லை!

இன்னும் சொன்னால் அவரை ஒரு ‘முதலமைச்சராகவே' டெல்லி நினைக்க வில்லை. அதனால் அவரை மதிக்கவே இல்லை. மரியாதையே இல்லாமல் முதலமைச்சர் நாற்காலியில் தொடர்ந்தவர்தான், இன்று இன்றைய முதலமைச்சரின் டெல்லிப் பயணத்தைக் கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிடுகிறார். தமிழ்நாடு முதலமைச்சரின் இன்றைய கோரிக்கைகள் வெளிப்படையானவை.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி செய்ய அனுமதி வழங்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், அரசியல் உரிமையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை காக்கப்பட வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்.

 ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. ஆனால் அதனை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தாமதம் செய்து வருகிறார். இந்தச் சட்டமுன்வடிவுக்கு ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது. அந்த அணை அமைந்தால் அது காவிரி உரிமையை மீறுவதாகும். தமிழ்நாட்டு மக்களுக்குத் தடையில்லா மின்சாரத்தை வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்துக்கு அதிகளவிலான நிலக்கரி வழங்க வேண்டும்.

 மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். ஜூன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டைத் தொடர்ந்து வழங்க வேண்டும். டி.டி.ஐ.எஸ்.

திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் 

தேசிய புதிய கல்விக் கொள்கை -2020-ஐ கைவிட வேண்டும்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - 2க்கு இந்திய அரசுக்கும்

தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50க்கு 50 என்ற பங்கு அடிப்படையில் ஒப்புதல் வழங்க வேண்டும்

 தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

நரிக்குறவர்கள்/குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக சேதம் ஏற்பட்டது. அதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து அதிகளவு நிதி ஒதுக்க வேண்டும்.

சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக ஆக்கவேண்டும். சென்னை - மதுரவாயல் உயர் மட்டச்சாலையை திருப்பெரும்புதூர் வரை நீட்டிக்கவும் வேண்டும். - இவைதான் முதலமைச்சர் முன் வைத்த கோரிக்கைகள். தமிழகம் தொடர்ச்சியாகச் சொல்லி வந்த கோரிக்கைகள்தான் இவை. இவற்றை நிறைவேற்றித் தர வேண்டிய கடமை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இருக்கிறது.

இவை அரசியல் கோரிக்கைகள் அல்ல. மாநிலத்தின் உரிமை தொடர்புடைய

கோரிக்கைகளும் இதில் இருக்கின்றன. மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகளும் இருக்கின்றன. மாநிலத்தின் தேவை தொடர்பான கோரிக்கைகளும் இருக்கின்றன. எனவே, இவற்றை ஒரு கட்சியின் கோரிக்கையாக இல்லாமல், ஒரு ஆட்சியின் கோரிக்கையாக இல்லாமல், ஒரு மாநிலத்தின் கோரிக்கையாக, கோடிக்கணக்கான மக்களின் கோரிக்கையாக நினைத்து டெல்லி இதனை நிறைவேற்றித் தர வேண்டும்.

பத்தாண்டுக் காலத்தில் தமிழ்நாடு பல்வேறு வகைகளில் பாழ்பட்டு விட்டது. அதிலிருந்து மீள்வதற்கான வழியில் கடந்த பத்து மாதகாலம் தான் பயணம் போயிருக்கிறோம். பத்தாண்டு காலப் பள்ளத்தை இட்டுநிரப்புவது என்பது சாதாரணக் காரியம் அல்ல. அசாதாரணமானது ஆகும்.

அதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அசாதாரணமாக உழைத்து வருகிறார். நித்தமும் உழைத்து வருகிறார். தமிழ்நாட்டை முன்னேற்றும் பொறுப்பைத் தனது தோளில் தானே சுமந்து வருகிறார்.

அவரது உழைப்பை மதித்து அவரது கோரிக்கைகளுக்கு டெல்லி செவிமடுத்து அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும்.

banner

Related Stories

Related Stories