தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறி 100க்கும் மேற்பட்ட நாய்களை விஷ ஊசி செலுத்தி தெலங்கானாவில் உள்ள கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கொன்றதாக விலங்குகள் நல ஆர்வலர் புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள திகுல் கிராமத்தில்தான் இந்த பயங்கரம் நடந்துள்ளதாகவும், அக்கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து நிர்வாகத்தினர்தான் நூற்றுக்கணக்கான நாய்களை கடந்த மார்ச் 27ம் தேதி விஷ ஊசி செலுத்தி கொன்றுவிட்டு கிணற்றி தூக்கி எறிந்திருக்கிறார்கள் என அதுலாபுரம் கவுதம் என்ற விலங்குகள் நல ஆர்வலர் போலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்.
அதில், தனியார் உரிமையாளரின் செல்லப்பிராணியான நாய் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விலங்குகள் நல ஆணையத்துக்கு வந்த தகவலை அடுத்து கடந்த ஞாயிறன்று மேற்குறிப்பிட்ட அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்த போதுதான் நூற்றுக்கணக்கான நாய்கள் கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்ததாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.
மேலும், மாபாதக செயலை புரிந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சித்திபேட் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை ஆணையரிடத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே திகுல் கிராமத்தில் கொன்று வீசப்பட்டிருந்த நாய்கள் குறித்த வீடியோவும் Peoples for animals india என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்கப்பட்டிருக்கிறது.