கேரளாவில் அகில இந்திய கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடக்க இருந்த சமயத்தில் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கேலரி சரிந்து விழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூங்கோடு பகுதியில் நேற்று (மார்ச் 19) இரவு 9 மணியளவில் கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இதற்காக அந்த மைதானத்தில் தற்காலிகமாக மூங்கில் மற்றும் மரப்பலகைகளால் ஆன கேலரி அமைக்கப்பட்டிருந்தது.
போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த தற்காலிக கேலரி சரிந்து விழுந்திருக்கிறது. இதனால் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் படுகாயமடைந்தவர்களுக்கு மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், மற்றவர்கள் பூங்கோடு பகுதியை சுற்றியுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருக்கிறார்கள். அப்போது மைதானத்தின் கிழக்கு திசையில் அளவுக்கு மீறி பாரம் கூடியதன் விளைவாக கேலரி சரிந்ததாகவும் அதன் காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மலப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விபத்து குறித்த விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். மேலும் போட்டி ஏற்பாட்டாளர்களிடம் விசாரித்ததில் எதிர்பார்த்ததை விட அதிகமான ரசிகர்கள் கூடியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது கேலரி சரிந்து விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே விபத்துக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.