சென்னை மாதவரம் ரவுண்டானா ரெட்டேரி அருகே காரில் ஏற்பட்ட மின் கசிவால் கார் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியது.
வேலூரைச் சேர்ந்த மைக்கேல், லிங்கமூர்த்தி, மெய்ஞானம், நேதாஜி ஆகிய நால்வர் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து தடாவில் உள்ள அருவி ஒன்றுக்கு சுற்றுலா செல்வதற்காக ஆன்லைனில் ரெனால்ட் கிட் காரினை புக் செய்து அதனை மெய்ஞானம் என்பவர் ஓட்டி வந்தார்.
கார் மாதவரம் ரவுண்டானா அருகில் இருந்து செங்குன்றம் வழியாக தடா நோக்கி கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது வழியில் ரெட்டேரி அருகே காரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக காரில் இருந்து புகை கிளம்பியது. உடனடியாக நால்வரும் காரில் இருந்து கீழே இறங்கி பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென தீ மளமளவென்று பரவியிருக்கிறது. இதனையடுத்து மாதவரம் தீயணைப்புத்துறைக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
உடனே மாதவரம் தீயணைப்புத்துறை வீரர் சரவணன் தலைமையில் விரைந்து வந்த வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அனைத்தனர்.
இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீப்பற்றி எரிந்த காரின் விபரங்களை விசாரித்து வருகிறார்கள். இதனிடையே காரில் ஏற்பட்ட விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.