கேரள மாநிலம் மலம்புழா பகுதியை சேர்ந்தவர் பாபு. 23 வயதான இவர் கடந்த திங்கட்கிழமை அன்று, தனது 3 நண்பர்களுடன், குறம்பேச்சி என்ற மலைப்பகுதியில், டிரெக்கிங் சென்றுள்ளார். அப்போது, பாறையில் எறிய போது திடீரென சறுக்கிய பாபு, இடுக்கில் இருந்த சிறியமலையை ஒட்டி அமைந்திருந்த குகையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், தீயணைப்புத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், எவ்வளவு முயன்றும் பாபுவை மீட்க முடியவில்லை. பின்னர், இந்த விஷயம் பெரும் பேசுபொருளாக மாறிய நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கையின் படி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவினர் களம் இறங்கினர்.
இதையடுத்து கொச்சி கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு நடைபெற்ற மீட்பு பணியும் தோல்வியில் முடிவடைந்தது. இளைஞர் சிக்கியுள்ள முகடு பகலில் கடும் வெப்பமும், இரவில் கடும் குளிரும் நிலவும் மலை பகுதி என்பதால் மலையேற்ற மீட்பு குழுவினரால் அங்கு செல்ல முடியவில்லை.
இதனிடையே 2 நாட்களாக தண்ணீர், உணவின்றி தவித்து வந்த இளைஞருக்கு ராணுவத்தின் உதவியுடன் உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதகமண்டலத்தில் உள்ள வெடிங்டன் படை பிரிவினரும், பெங்களூருவில் இருந்து மலையேற்றம் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களும், பாபுவை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஒரு வழியாக, 43 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கயிற்றின் உதவியுடன், இளைஞர் பாபு, மலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். மேலும், சிகிச்சைக்காக அவர் ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.