டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக அறியப்படுகிறது. நவீன சிந்தனைகள், ஆழமான ஜனநாயகப் பார்வை, முற்போக்கான நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்றது.
அதுமட்டுமல்லாது மக்கள் விரோத சட்டங்களை கண்டித்து, பல்கலைக்கழங்களில் நடக்கும் அநீதி வதிமுறைகள் மற்றும் கட்டணக்கொள்ளைக்கு எதிராக போராடி வெற்றிப் பெற்ற வரலாறு இந்தப் பல்கலைக்கழங்களுக்கு உண்டு.
குறிப்பாக, , மோடி அரசின் மதப்பாகுபாட்டுடன் கூடிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சமரசமின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், மாணவர்களின் போராட்டத்தால் நாடுமுழுவதும் எழுந்த எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சங்-பரிவார குண்டர்களும், டெல்லி காவல்துறையினரும் பல்கலைக்கழகத் திற்கு உள்ளேயே புகுந்து வன்முறை வெறியாட்டம் நடத்தினர்.
அதுமட்டுமின்றி, இந்த பல்கலைக்கழகம் தீவிரவாதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது, என்று மத்திய ஆட்சியாளர்களே பகிரங்கமாக குற்றம் சாட்டினர். ஒன்றிய அரசின் இத்தகைய குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன்காரணமாக இந்தப் பல்கலைக்கழகத்தை மதவெறிமயமாக்க நீண்டகாலமாக மோடி அரசு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி ஐ.ஐ.டி எலக்ட்ரிக்துறை பேராசிரியர் முனைவர் ஜெகதீஷ் குமாரை துணை வேந்தராக நியமித்து, அவர் மூலமாக பல்கலைக்கழக அமைதியை முடிந்தளவிற்கு சீர்குலைத்தது. தற்போது ஜெகதீஷ் குமாரை, பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி-க்கு தலைவராக நியமித்து விட்டு, புதிய துணைவேந்தராக பேராசிரியர் முனைவர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் (59) என்பவரை நியமித்துள்ளது.
இந்நிலையில், ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமையுடன் வந்துள்ள சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டும், தீவிர இந்துத்துவா பின்னணி கொண்டவர் என புகார்கள் எழுந்துள்ளன. சிறுபான்மையினரை விமர்சித்தும், விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகவும் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் கடந்த காலங்களில் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகளும் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, கிறிஸ்தவர்கள், ‘அரிசிப்பைக்காக மதம் மாறியவர்கள்’ என்றும், முஸ்லிம்களில் சன்னி பிரிவினர் இஸ்லாத்தில் தீவிரம் காட்டுபவர்கள் என்றும் அந்த பதிவுகளில் சாந்திஸ்ரீ விமர்சித்துள்ளார். மேலும், ‘காந்தியும் கோட்சேவும் ஒரே கீதையை படித்து நம்பினாலும் அதை நேரெதிர் பாடங்களாகப் புரிந்து கொண்டனர் என்பது எனது கருத்து.
ஒன்றுபட்ட இந்தியாவைகாண மகாத்மா காந்தியை கொல்வது அவசியம் என கோட்சே எண்ணிவிட்டார்’ என்றும் சாந்திஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவுகள் தற்போது சமூகவலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன. இதனையடுத்து தனது ட்விட்டர் கணக்கை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் ஜே.என்.யு முன்னாள் மாணவர் எனக் கூறப்படுகிறது.