மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பச்சோர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வட்டாட்சியர் ராஜேஷ் சோர்டே தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்குவந்த மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ பகவான் சிங் ராஜ்புத், ஆக்கிரமிப்பு அகற்றத்தை கைவிடுமாறு வட்டாட்சியரை எச்சரித்துள்ளார்.
பின்னர், தன் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை வட்டாட்சியர் ராஜேஷ் சோர்டே மீதும், ஆக்கிரமிப்பு தடுப்புப் பிரிவினர் மீதும் ஊற்றி, அவர்கள் மீது தீ வைத்து எரிக்கும் முயற்சியிலும் பகவான் சிங் இறங்கியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தலைமை நகராட்சி அதிகாரி பவன் மிஸ்ரா, காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதைத் தொட ர்ந்து, தற்போது பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ பகவான் சிங் ராஜ்புத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.