உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 7ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் ஆளும் பா.ஜ.கவிற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் உ.பியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி, அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது, மீரட்டில் பிரச்சாரம் செய்துவிட்டு டெல்லி திரும்பியபோது, சாஜ்ஜ்ர்சி சுங்கச்சாவடி அருகே மர்ம நபர்கள் சிலர் அவரது காரை குறி வைத்து 4 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஓவைசியை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலிஸார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஓவைசி சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதம் தாங்கிய 45 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் இருவருக்கும் அவர்களது வீட்டிலும், அவர்கள் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஓவைசி தொடர்ந்து இந்து மதத்தை விமர்சித்துப் பேசுவதால், அவரது இந்து விரோத பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதான இருவரும் போலிஸில் தெரிவித்ததாக ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.