மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் கிராமத்தில் பரிமள ரெங்கநாதர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள ‘படிச்சட்டம்' கடந்த 2014ஆம் ஆண்டு காணமால் போனதாக கோயில் நிர்வாகம் புகார் அளித்ததன் பேரில் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
ஆனால் பின்னர் அ.தி.மு.க ஆட்சியின் அலட்சித்தால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கமாலும், வெள்ளித் தகடுகள் குறித்து போலிஸார் விசாரிக்காமலும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் திருடப்பட்ட வெள்ளி படிச்சட்ட தகடுகளை மீட்க வேண்டும் என சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதால், இந்த வழக்கை போலிஸார் மீண்டும் விசாரித்தனர்.
இந்த விசாரணையில், அக்கோயிலில் பணிபுரியும் தீட்சிதர் முரளிதரனும், பட்டர் ஸ்ரீநிவாச ரெங்கரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களை பிடித்து போலிஸார் விசாரிக்கையில் அவர்கள் அந்த தகடுகளை வெட்டி திருடிச் சென்று உருக்கியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதால், பழைய படிச்சட்டம் போல செய்ய ஆர்டர் கொடுத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது, படிச்சட்டம் செய்வதாக பக்தர்களிடமும் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலிஸார் நகைக்கடையில் கொடுத்திருந்த 15 கிலோ அளவிலான வெள்ளிக்கட்டியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோயில் வெள்ளித் தகடுகளை திருடிய அர்ச்சகர்களின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.