கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். இளைஞரான இவர் பாம்பு பிடிப்பதில் வல்லவர். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் பிடிப்பதில் கைதேர்ந்தவர். இவரை அறியாத கேரள மக்களே இருக்க முடியாது.
இவர் பாம்பு பிடிக்கும் வீடியோ எப்போதும் இணையத்தில் வைரலாகிக் கொண்டே இருக்கும். இந்நிலையில், அவரை ராஜ நாகம் ஒன்று தீண்டியதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று வழக்கம் போல் அவருக்கு வீட்டிற்குள் ராஜநாகம் புகுந்துவிட்டதாக அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அவர் அங்குச் சென்று பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் போட முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாகப் பாம்பு அவரது கைப்பிடியிலிருந்து நழுவி சுரேஷின் வலது தொடையில் கடித்தது. இதையடுத்து அவர் பாம்பை கீழே விட்டுவிட்டு வலியால் துடித்துள்ளார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
ஏற்கனவே 2020ம் ஆண்டு சுரேஷை பாம்பு கடித்துள்ளது. அப்போதும் அவர் தீவிர சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார். தற்போது மீண்டும் அவரை ராஜநாகம் கடித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு கோட்டயம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வாவா சுரேசுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். முன்னதாக நான் பாம்பு பிடிக்கவில்லை என்றால் உயிரோடு இல்லை என்று அர்த்தம் என்று சுரேஷ் பேட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.