காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் ஒமைக்ரானைவிட பிரதமர் மோடி மக்களை நோக்கிச் சொல்லும் 'ஓ மித்ரோன்' மிகவும் அபாயகரமானது எனச் சாடியுள்ளார்.
கொரோனாவின் ஒமைக்ரான் தொற்றையும் (Omicron) மித்ரோனையும் ஒப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் சசி தரூர் எம்.பி. மித்ரோன் என்பது பிரதமர் மோடி அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை. இந்தியில் மித்ரோன் என்றால் தமிழில் நண்பர்களே என அர்த்தம். பிரதமர் மோடி தனது உரையை, "ஓ மித்ரோன்" எனக்கூறி தொடங்குவார்.
பிரதமர் மோடி பயன்படுத்தும் இந்த வார்த்தையை ஒமைக்ரானை ஒப்பிட்டு ட்வீட் செய்துள்ள சசி தரூர், “ஓ மித்ரோன் ஒமைக்ரானை விட மிகவும் ஆபத்தானது. நாங்கள் 'ஓ மித்ரோன்' விளைவை அன்றாடம் கவனித்து வருகிறோம்.
பிரிவினைவாதம், வெறுப்புப் பிரச்சாரங்கள், மதவெறி, நாட்டின் அரசியலமைப்பு சாசனத்தின் மீதான தாக்குதல் மற்றும் வலுவிழக்கும் ஜனநாயகம் ஆகியவை ஓ மித்ரோன் விளைவால் அதிகரித்து வருகின்றன.
ஓ மித்ரோனை பொறுத்தவரை அதில் லேசானது உருமாறியது என்ற வேறுபாடே இல்லை. எப்போதுமே ஆபத்தானதுதான்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.