டெல்லியில் கஸ்தூரிபா நகரில் கடந்த 26ஆம் தேதி இளம்பெண் ஒருவரை போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது தலைமுடியை வெட்டி, செருப்பு மாலை அணிவித்து பொதுவெளியில் இழிவுபடுத்தியது.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் மஸ்வாதி போலிஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 14 பேரை போலிஸார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில், "20 வயது பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ நமது சமூகத்தின் மிகவும் கவலைக்கிடமான முகத்தை அம்பலப்படுத்துகிறது. கசப்பான உண்மை என்னவென்றால், பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை. இந்த வெட்கக்கேடான உண்மை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.