டெல்லியில் உள்ள கஸ்தூரிபா நகரில் மது மற்றும் போதை பொருட்களை விற்கும் 3 பேர் கொண்ட கும்பலால் 20 வயதுடைய பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அடுத்து அந்த பெண்ணின் தலை முடியை மழித்து, அவருக்கு செருப்பு மாலை அணிவித்து, அவரது முகத்தில் கருப்பு பொடியை பூசி பொதுவெளியில் வைத்து அப்பகுதி மக்கள் இழிவுபடுத்தியிருக்கிறார்கள்.
இது தொடர்பான வீடியோவை டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் ட்விட்டரில் பகிர்ந்ததோடு இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலிஸாருக்கு நோட்டீஸ் விடுத்துள்ளதாகவும், இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட ஆண் பெண் என அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் படியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்வாதி மலிவாலின் இந்த பதிவு ரிட்வீட் செய்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் “இது அவமானகரமானது. இந்த மாதிரி செயல்பட குற்றவாளிகளுக்கு எப்படி தைரியம் வந்தது? உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சரும், துணைநிலை ஆளுநரும் காவல்துறைக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முறையான கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இதனிடையே ஸ்வாதி மலிவாலின் புகார் மீது டெல்லி போலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண் கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த ஒருவரை காதலித்ததாகவும், அந்த நபர் திடீரென தற்கொலை செய்துக்கொண்டதால அதற்கு அந்த பெண்தான் காரணம் என இறந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில்தான் அப்பெண்ணை போதை பொருள் விற்கும் கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக தெரிய
வந்திருக்கிறது. பழிவாங்கும் விதமாகவே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார்கள் என்றும் பாலியல் வன்கொடுமை செய்த மூவரை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.