உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு பிரசார வேலைகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது.
ஆளும் பாஜக கட்சியில் இருந்து அமைச்சர்கள் உட்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்ததால் அங்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், பாஜகவுக்கு மேலும் தலைவலியை கொடுக்கும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏவின் பேச்சு எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
அதன்படி கான்பூரைச் சேர்ந்த கித்வாய் நகர் தொகுதி எம்.எல்.ஏவான பாஜகவின் மகேஷ் திரிவேதி பிரசாரத்தின் போது தனது ஆதரவாளர்கள் முன்னிலையில், “தன்னை பற்றி கருத்து கூறும் எதிர்க்கட்சியினரை தடியாலும் செருப்பாலும் அடியுங்கள். ஆனால் துப்பாக்கியால் மட்டும் சுட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.
அவரது பேச்சுக்கு மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகேஷ் திரிவேதி பேசியது தொடர்பான வீடியோயும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இப்படி இருக்கையில், சமாஜ்வாதி கட்சி பாஜக எம்.எல்.ஏவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்தும்படி கூறுகிறார் பாஜக எம்.எல்.ஏ.
இதுதான் பாஜகவின் நடை. இதுதான் அவர்களின் உண்மையான முகமும் குணமும் கூட. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.